ADDED : ஏப் 25, 2025 01:19 AM
போச்சம்பள்ளி:
மத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, 14 ஏக்கரில், மத்துார் சின்னஏரி உள்ளது. இங்கு, மத்துார் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, கோழி இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டி, அதற்கு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், தர்மபுரி - திருப்பத்துார், கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளில் சென்று வரும் மக்கள், அதேபோல் மத்துார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இரவு நேரங்களில் கொழுந்து விட்டு எரியும் தீயினால், அங்குள்ள மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.
இதை கருத்தில்கொண்டு சுகாதாரமற்ற நிலையிலுள்ள மத்துார் சின்னஏரியை பராமரித்து, அதில் மரக்கன்றுகளை நட, மத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஆனந்திமாலாவின் முன்னெடுப்பாக, 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியருடன் நேற்று 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதையறிந்த, மத்துார் அனைத்து வணிகர் சங்கத்தினர், அந்நிகழ்ச்சியில், தங்களது ஒத்துழைப்பை அளித்தனர்.

