/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் நான்கு பேரை மடக்கி பிடித்தது போலீஸ்
/
ஓசூர் அருகே ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் நான்கு பேரை மடக்கி பிடித்தது போலீஸ்
ஓசூர் அருகே ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் நான்கு பேரை மடக்கி பிடித்தது போலீஸ்
ஓசூர் அருகே ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் நான்கு பேரை மடக்கி பிடித்தது போலீஸ்
ADDED : நவ 23, 2025 02:06 AM

ஓசூர்: ஓசூரில், 5 கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை மீட்ட போலீசார், 4 பேர் கும்பலை கைது செய்தனர். பெண் உட்பட மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே மாதரசனப்பள்ளியை சேர்ந்தவர் சீதாராமன், 34; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
இவரிடம், பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை அறிந்த மர்ம கும்பல், அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது.
ஏழு பேர் கும்பல் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சீதாராமனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், நிலம் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி, ஓசூர் அருகே பத்தலப்பள்ளிக்கு வரவழைத்தார்.
அங்கு சென்ற சீதாராமனை, தன் வீட்டிற்கு சென்று பேசலாம் எனக்கூறி அப்பெண் அழைத்து சென்றார்.
அங்கு, ஏழு பேர் கொண்ட கும்பல், ஓர் அறையில் சீதாராமனை கட்டி வைத்து, அடித்து உதைத்து, 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது.
நேற்று காலை, சீதாராமனின் மொபைல்போனை அவரிடம் கொடுத்த கும்பல், பணத்தை அனுப்பும் படி கேட்டு மிரட்டியது.
சுதாரித்த சீதாராமன், தான் இருக்கும் இட லொகேஷனை, தன் நண்பர் லட்சுமிபதிக்கு அனுப்பினார். அவர், சீதாராமன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின், மாவட்ட எஸ்.பி., தங்கதுரைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர், ஓசூர் உட்கோட்ட போலீசாரை நேற்று, 'அலர்ட்' செய்தார். இதையறிந்த கும்பல், சீதாராமனை அவரது காரில் வேறு பகுதிக்கு கடத்தி சென்றது.
பத்திரமாக மீட்பு ஓசூர் அருகே சூடசந்திரம் பகுதியில் மர்ம கும்பல் காரில் தப்பி செல்வது, போலீசாருக்கு தெரிய வரவே, மதியம், 3:00 மணிக்கு அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார், தங்கள் ஜீப்பை காரின் குறுக்கே நிறுத்தி, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை சுற்றி வளைத்தனர்.
சீதாராமனையும் பத்திரமாக மீட்டனர். ஹட்கோ போலீசாரிடம், நான்கு பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள், ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்த சங்கர், 38, திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அம்பேத்கர் காலனியை சேர்ந்த அஜய், 19, அதே பகுதியை சேர்ந்த கோகுலகண்ணன், 23, ஓசூர், பத்தலப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், 40, என்பது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், இரு கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மோகன், பெண் ஒருவர் என, மூன்று பேரை தேடி வருகின்றனர்.

