/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊதியம், பணப்பலன்களை வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம்
/
ஊதியம், பணப்பலன்களை வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2025 05:51 AM
பாகலுார்: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே பெலத்துாரில் டிட்கோவின் பங்கு தொகையுடன், 'ஏசியன் பேரிங்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் கடந்த, 2006 ஜன., 9ம் தேதி மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள், 611 பேருக்கும் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிறுவனம் மூடப்பட்டதால், 'ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன்' சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை, 92 தொழிலாளர்கள் வயது மூப்பால் மரணமடைந்து உள்ளனர்.
ஆனால், இன்று வரை ஊதியம் மற்றும் பணப்பலன்களை வழங்கவில்லை. இதை கண்டித்து, பெலத்துாரில் செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ள,'ஏசியன் பேரிங்' நிறுவனம் முன், ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமையில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 'ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன்' பொதுச்செயலாளர் கிறிஸ்துநேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஊதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார்.

