ADDED : மார் 13, 2026 07:37 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பஞ்., ஜம்புகுட்டப்பட்டியில், போச்சம்பள்ளியிலிருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில், சிவில் சப்ளை குடோன் அருகே உள்ள சாலை, கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தது.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த, 6 மாதங்களுக்கு முன், நபார்டு திட்டத்தில், 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ச்சாலை அமைக்க பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தலைமையில் பூமி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து, 4 மாதங்களுக்கு மேலாக பணி நடக்காமல், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை தோண்டி பணியை துவக்கிய நிலையில், பின் அப்படியே சாலைப்பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் ஜம்புகுட்டப்பட்டி கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கிடப்பில் போட்ட சாலை அமைக்கும் பணியை, உடனடியாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
