ADDED : நவ 25, 2026 06:27 AM
ஓசூர்; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்துாணில், மஹா தீபம் ஏற்ற வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபத்துாணில் நேற்று தீபம் ஏற்றப்படவில்லை. இதை கண்டித்தும், தமிழக அரசிற்கு எதிராகவும், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழக இணை செயலாளர் விஷ்ணுகுமார் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், விஷ்ணுகுமார் உட்பட, 15க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். நகர் முழுவதும் ஆங்காங்கு ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், நேற்றிரவு நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அரசு அலுவலகங்கள் முன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
