/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் கடும் வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை
/
ஓசூரில் கடும் வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஓசூரில் கடும் வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஓசூரில் கடும் வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை
ADDED : மார் 20, 2024 10:31 AM
ஓசூர்: ஓசூரில் நிலவும் கடும் வறட்சியால், ரோஜா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்கத்தால் தரமான பூக்களை சாகுபடி செய்ய முடியா நிலையில், விலையும் சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்புற பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, சிகப்பு ரகங்களான தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், வெள்ளை ரகமான அவலாஞ்சி, இளம்சிவப்பு ரகமான நோப்லஸ், ஆரஞ்சு ரகமான கார்வெட், மஞ்சள் ரகமான கோல்ட் ஸ்டிரைக் போன்ற பல்வேறு வகையான ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஏற்றுமதியில் சரிவு
ஓசூரிலிருந்து, ஆண்டுதோறும் புத்தாண்டு, காதலர் தினம், கிறிஸ்துமஸ் நாட்களில், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரசு நாடுகள், வங்கதேசம், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதியாகும். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த காலங்களில், ஒரு கோடிக்கு மேல் ஏற்றுமதியான ரோஜாக்கள், படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு காதலர் தினத்திற்கு, 30 லட்சம் ரோஜாக்கள் மட்டுமே ஏற்றுமதியானது. ஓசூர் ரோஜாக்கள் இடத்தை, கென்யா, எத்தோப்பியா மற்றும் சீன மலர்கள் பிடித்துள்ளன. அதனால், ஆண்டுதோறும் ரோஜா ஏற்றுமதி குறைந்து வருகிறது. ஓசூரில், போர்வெல் நீரால், ரோஜா சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இந்நிலையில், கடும் வறட்சியால் போர்வெல்கள் வறண்டு, போதிய நீரின்றி சாகுபடி பாதித்துள்ளது.
இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது:ஹோலி பண்டிகைக்காக, வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல துவங்கி விட்டனர். போர்வெல்களில் நீரின்றி, ரோஜா சாகுபடி பெரிய அளவில் பாதித்துள்ளது. உள்ளூர் சந்தைகளில், 20 பூ கொண்ட ஒரு கட்டு ரோஜா, 40 முதல், 50 ரூபாய்க்கு  வாங்கப்படுகிறது. உற்பத்தி செலவே, 90 ரூபாய் வரை ஆகிறது.
இது விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பசுமை குடில்களுக்குள் காலை நேரங்களில், 15 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்க வேண்டும். ஆனால், 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ளது.
இதனால், ரோஜாக்களின் வெள்ளை பூஞ்சான், சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கம் அதிகரித்து, செடிகள் பாதித்து வருகின்றன. கடும் வறட்சியை சமாளிக்க முடியாமல், ரோஜா சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தோட்டக்கலைத்துறை உடனடியாக விவசாய தோட்டங்களை பார்வையிட்டு, ரோஜா செடிகளை பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

