/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காதலர் தினத்திற்கு ரோஜா ஏற்றுமதி சரிந்தது: ஓசூர் விவசாயிகள் கவலை
/
காதலர் தினத்திற்கு ரோஜா ஏற்றுமதி சரிந்தது: ஓசூர் விவசாயிகள் கவலை
காதலர் தினத்திற்கு ரோஜா ஏற்றுமதி சரிந்தது: ஓசூர் விவசாயிகள் கவலை
காதலர் தினத்திற்கு ரோஜா ஏற்றுமதி சரிந்தது: ஓசூர் விவசாயிகள் கவலை
ADDED : பிப் 12, 2024 11:17 PM

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில், 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, தாஜ் மஹால், பர்ஸ்ட்ரெட் உட்பட, 14க்கும் மேற்பட்ட ரோஜாக்கள் சாகுபடியாகின்றன.
உலகம் முழுதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2ம் தேதி ரோஜா ஏற்றுமதி துவங்கி, 10 வரை நடந்தது.
சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகின. விவசாயிகளிடம் ஒரு ரோஜா, 14 - 18 ரூபாய் வரை வாங்கப்பட்டது.
ஏற்றுமதி, 50 லட்சம் ரோஜா என்ற அளவிற்கு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்தாண்டை போல் குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவபிரசாத் கூறியதாவது:
கென்யா, எத்தியோப்பியா மற்றும் சீன மலர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஓசூர் வர்த்தகத்தை அந்நாட்டு மலர்கள் பிடித்ததால், 50 லட்சம் ரோஜா ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்தும், 30 லட்சம் மட்டுமே ஏற்றுமதியானது.
விவசாயிகள், 15 ஆண்டுகளுக்கு முந்தைய ரோஜா ரகங்களை மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர். ஏற்றுமதி குறைந்ததற்கு இதுவும் முக்கிய காரணம். சீனா, கென்யா, எத்தியோப்பியா நாடுகள், புதுப் புது ரோஜா ரகங்களை சாகுபடி செய்கின்றன. பல நாடுகளும் இவற்றை விரும்பிவாங்குகின்றன.
கென்யா, எத்தியோப்பியா நாடுகளில், 12 மணி நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. உற்பத்தி செலவு குறைவு என்பதால் அதிக சாகுபடி நடக்கிறது.
ஓசூரை பொருத்தவரை உற்பத்தி செலவு அதிகம். ஏக்கருக்கு பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, ஆட்கள் சம்பளம், பராமரிப்பு, போக்குவரத்து செலவு என, 21 லட்சம் ரூபாய் செலவாகிறது.
ஏற்றுமதியை குறி வைத்து தான் செலவு செய்கிறோம். ஏற்றுமதி பாதிப்பால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.