ADDED : ஜன 27, 2024 04:15 AM
வீட்டில் திருட முயன்றவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் வஜ்ரம்,42;விவசாயி. நேற்று முன் தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வயலில் நெற்பயிர் நடவு செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின் மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பொருட்கள் திருடு போகவில்லை. புகாரின் படி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற திருச்சி மாவட்டம் துவாகுடிமலை, சமாதானபுரத்தை சேர்ந்த சிங்காரவேல்,33, என்பவரை கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் விழுந்து விவசாயி பலி
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கோதண்டபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 42.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூரை சேர்ந்தவர் விஜயபாரத், 45. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானதால், அவற்றை சரி செய்ய மின் மோட்டாரை, வெளியே கொண்டு வரும் பணி நேற்று நடந்தது. இதற்காக, கோதண்டபுரத்தை சேர்ந்த பத்மநாபன் டிராக்டர் மூலம் இழுத்து மின்மோட்டாரை மேலே கொண்டுவரும் பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென டிராக்டரோடு, பத்மநாபன் கிணற்றில் விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே
பத்மாநாபன் பலியானதாக தெரிவித்தனர். வடவணக்கம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்னிவீர் வாயு விமானப்படையில்
பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி, ஜன. 27-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விமான படையின், அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில், ஆட்சேர்ப்பு தேர்வு வரும் மார்ச், 17ல் நடக்கிறது. இதற்கு இணையவழியில் வரும் பிப்., 6 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு 2004, ஜன., 2 முதல் 2007 ஜூலை, 2 வரை பிறந்த, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தகுதியானவர்கள். இவர்கள், பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம், 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு 04343 - 291983 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விடுமுறை வழங்காத
நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி, ஜன. 27-
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெளியிட்ட அறிக்கை: தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்காதபட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.
நேற்று குடியரசு தினத்தன்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட, 91 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 64 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

