ADDED : ஆக 17, 2026 03:20 AM
தனியார் ஊழியர் மாயம்
ஓசூர்: ஓசூர் அருகே பூனப்பள்ளியை சேர்ந்தவர் சந்தன், 33. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 14ம் தேதி இரவு, 7:00 மணிக்கு அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்திலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அவரது தந்தை ராமகிருஷ்ணாரெட்டி, 54,
மத்திகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான சந்தனை தேடி வருகின்றனர்.
ஆபாசமாக பேசிய
தொழிலாளி கைது
ஓசூர்: ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மல்லேஷ், 26. தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த போது, அங்கு வந்த தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வேலாம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக், 23, என்பவருக்கும், மல்லேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், ஆபாச வார்த்தைகளால் மல்லேஷை திட்டினார். இது குறித்து அவரது புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் கார்த்திகை கைது செய்தனர்.
ஹெச்.எம்., வீட்டில்
5 பவுன் நகை திருட்டு
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, நொச்சிப்பட்டி அருகே உள்ள பெரிய கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ், 44, ஆட்டோ ஓட்டுனர். இவர் மனைவி கோமதி. ஊத்தங்கரை அடுத்த, படதாசம்பட்டி அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியை. ஜேம்ஸ் உடல்நிலை சரியில்லாததால் கடந்த, 13ம் தேதி நள்ளிரவு வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தன் தாயிடம் சாவியை கொடுத்து விட்டு, சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றார்.
அதிகாலை அவருடைய மகள் ஸ்ரீமதி, 19, கோவையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த, 2 பவுன் ஆரம், 3 பவுன் நெக்லஸ், 3 வெள்ளி கால் கொலுசு ஆகியவை திருடு போனது தெரிந்தது. புகார்படி, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கி.கிரி நகராட்சி பகுதியில்
1,200 மரக்கன்று நடும் பணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகரின் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், நகராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு, பூங்கா வளாகம் முழுவதிலும், வேப்பம், புங்கம், அரசம், ஆலம் உள்பட பல்வேறு வகையான, 1,200 மரக்கன்றுகளை நட்டனர்.
நகர பகுதிகளில், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கவும், பொதுமக்களுக்கு துாய்மையான காற்றை உறுதி செய்யவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை, தொடர்ந்து பராமரித்து, பாதுகாப்பாக வளர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி ஊழியர்களின் இப்
பணியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
