/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்
/
சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்
ADDED : மே 04, 2024 09:52 AM
எருது விடும் விழாவில் சீறிய காளைகள்; ஏழு பேர் காயம்
ஓசூர்: சூளகிரி அருகே நடந்த எருது விடும் விழாவில், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள், 7 பேர் லேசான காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் தர்மராஜ சுவாமி கோவிலில், 385ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 22 ல் துவங்கி நேற்று வரை நடந்தது. கடந்த, 1ல், தேரோட்டம், பூசாரியிடம் முறம் மற்றும் துடைப்பத்தால் அடிவாங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இறுதி நாளான நேற்று எருது விடும் விழா நடந்தது. சூளகிரி, சானமாவு, உத்தனப்பள்ளி, பைரமங்கலம், கெலமங்கலம், ஏ.செட்டிப்பள்ளி, குந்துமாரனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் நுாற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.
விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர். காளைகள் தாக்கியதில், 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், உத்தனப்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செயின் பறிப்பு: திருடன் கைது
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, பெருகோபனபள்ளியை சேர்ந்தவர் அருள் சத்திய பிரியா, 35. இவர், கொடமாண்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை காலை, பணிக்கு சென்று விட்டு, கண்ணன்டஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி ஓய்வு பெறும் பாராட்டு நிகழ்ச்சிக்காக, மத்துார் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த நான்கு பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து மத்துார் போலீசார் விசாரித்து வந்த நிலையில், சாமல்பட்டி அடுத்த, கோர்லப்பட்டியை சேர்ந்த லோகேஷ், 20, சந்துாரை சேர்ந்த சுஜித், 20, இருவரும் கூட்டாக சேர்ந்து நகை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லோகேஷை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுஜித்தை தேடி வருகின்றனர். லோகேஷிடமிருந்து, நான்கு பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூரில் சிறுவன் மாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். கடந்த, 1 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் திரும்பி வரவில்லை. அவரது தாய் கொடுத்த புகார்படி, மாயமான சிறுவனை ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: எஸ்.பி.,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, அரசு மதுபானங்கள் சந்து கடைகளில் விற்பனை மற்றும் மணல் கடத்தல், விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 24 மணி நேரமும் போலீசாருக்கு, 94981 81214 என்ற மொபைல் எண்ணுக்கோ, அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரிவிக்கலாம். சட்ட விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மழை பெய்ததால் ஆடுகளை பலியிட்டு விவசாய பணி துவக்கம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கொட்டாயூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில், விவசாயிகள் மானாவாரி சாகுபடியை மேற்கொள்வது வழக்கம். கோடை மழையை எதிர்பார்த்து, கிராமத்தில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவிலில் ஆடுகளை பலியிட்டு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.
சித்திரை மாதமான தற்போது விவசாய பணிகளை துவங்க இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், கொட்டாயூர் கிராம மக்கள் விவசாய பணிகளை நேற்று துவங்கினர். முன்னதாக நேற்று காலை, மாரியம்மன், முனியப்பன் கோவில் வளாகத்தில், 30 ஆடுகளை பலியிட்டு மக்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆட்டுக்கறியை பங்கிட்டு வீடுகளுக்கு எடுத்து சென்று, அசைவம் சமைத்து சாப்பிட்டனர். ஊர் முழுவதும் நேற்று அசைவ விருந்து பரிமாறப்பட்டது.