/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழை பாதிப்பு கணக்கெடுப்பு நடத்த தனிக்குழு
/
மழை பாதிப்பு கணக்கெடுப்பு நடத்த தனிக்குழு
ADDED : டிச 04, 2024 01:35 AM
ஊத்தங்கரை, டிச. 4-
'பெஞ்சல்' புயல் மழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மத்துார், - ஊத்தங்கரை செல்லும் சாலை, மத்துார் - தர்மபுரி சாலை, பகுதிகளை நேற்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கலெக்டர் சரயு, காங்., - எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் ஆகியோர், காமராஜ் நகரில் அமைத்துள்ள மருத்துவ முகாம், பரசனேரி ஏரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
மழை பாதிப்புக்கு உள்ளான பகுதி மக்களை, துறை அலுவலர்கள் இரவோடு இரவாக வெளியே கொண்டு வந்து, 7 நிவாரண முகாம்களில், 1,500 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, உடை, பாய், பெட்ஷிட், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர். மாவட்டம் முழுவதும், 50 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஊத்தங்கரையில் மட்டும், 15 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்பு இடங்களில் ஆய்வு செய்து, என்ன பாதிப்பு, உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிக்கை தயாரித்து தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பாதிப்படைந்த பகுதிகளில் விவசாயம், கால்நடைகள், வீட்டிலுள்ள பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு எடுத்து, அதன்பின்னர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், மழை வெள்ளம் புகுந்த ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டார பகுதிகளுக்கு, ஓசூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து, 200 துாய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, செயற்பொறியாளர் மலர்விழி, ஆர்.டி.ஓ., ஷாஜகான், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி உள்ளிட்ட பலர்
உடனிருந்தனர்.