/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 15, 2024 01:08 AM
துாய்மை பணியாளர்களுக்கு
சிறப்பு மருத்துவ முகாம்
ஓசூர், டிச. 15-
ஓசூரில், துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 45 வார்டுகளில் குப்பைகளை சேகரித்தல், சாக்கடை கால்வாயை துார்வாருதல் மற்றும் நுண்ணுர செயலாக்க மையங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் பணி ஆகியவற்றில், ஒப்பந்த மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்கள், 700 பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மண்டபம் ஒன்றில், நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாநகர கமிஷனர் ஸ்ரீகாந்த், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு தொற்று நோய், தொற்றா நோய், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, பெண்கள் மருத்துவம், காசநோய், தொழுநோய், பல், எலும்பு முறிவு, நுண்கதிர் ஆய்வு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, குறைபாடுகள் இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மாநகர நல அலுவலர் அஜிதா, கவுன்சிலர் மோசின்தாஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.