ADDED : அக் 18, 2026 04:29 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என, ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள், கடை நடத்த உரிமம் பெற்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவை உள்ளதா என பார்வையிட்டார்.கடை உள்ள இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என, போர்டு வைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கடையில் பட்டாசுகளை இருப்பு வைக்கும் அளவு எவ்வளவு போன்ற விபரங்களை ஆய்வு செய்தார். பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதா என கடை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். தீயணைப்பு கருவிகளை, பட்டாசு கடை ஊழியர்களுக்கு பயன்படுத்த தெரிகிறதா என தெரிந்து கொள்ள, செயல்விளக்கம் செய்து காட்டுமாறு கேட்டார்.
கடைகளுக்கு வெளியே வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் என, கடை உரிமையாளர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, ஓசூர் தாசில்தார் ஜெகதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சென்னம்மாள், சிப்காட் இன்ஸ்பெக்டர் இளவரசன், பட்டாசு கடை உரிமையாளர் சங்க தலைவர் கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.
