ADDED : ஏப் 02, 2026 03:55 AM

ஓசூர் :ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, குன்றின் மீது அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, அழகன் முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. ராஜா அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
அப்போது, சூரிய ஒளி கதிர்கள், அழகன் முருகன் திருமேனி மீது விழுந்துள்ளது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்து, 'அரோகரோ' கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஓசூர் பாரதிதாசன் நகர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு சீர்வரிசை தட்டு எடுத்து வருதல், 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி -- 2ல் அமைந்துள்ள, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, அபிஷேக, அலங்காரம், ஆராதனை, கூட்டு வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, சீர்வரிசைகளுடன், மாலை மாற்றி, யாகம் வளர்த்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
