/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக அரசின் விருது பெற்ற ஓசூர் வன கால்நடை மருத்துவர் தற்கொலை
/
தமிழக அரசின் விருது பெற்ற ஓசூர் வன கால்நடை மருத்துவர் தற்கொலை
தமிழக அரசின் விருது பெற்ற ஓசூர் வன கால்நடை மருத்துவர் தற்கொலை
தமிழக அரசின் விருது பெற்ற ஓசூர் வன கால்நடை மருத்துவர் தற்கொலை
ADDED : ஆக 22, 2024 03:50 AM
ஓசூர்: துணிச்சலான பணிக்காக, தமிழக அரசின் விருது பெற்ற, ஓசூர் வன கால்நடை மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், கன்னங்குறிஞ்சியை சேர்ந்தவர் பிரகாஷ், 40; ஓசூர் வனக்கோட்டத்தில், வன கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா, 37; திருநெல்வேலி மாவட்ட பத்திரபதிவு துறை பதிவாளராக உள்ளார். கடந்த, 15 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 6 வயதில் மகள் உள்ளார். இவர் கவிதாவின் தாய் வீட்டில் வளர்கிறார்.
ஓசூர், மாருதி நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் பிரகாஷ் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவரது தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ், மனைவி கவிதாவிற்கு போன் செய்து பேசி விட்டு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு போனை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த கவிதா, அப்பார்ட்மென்ட் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள படுக்கையறையில் துப்பட்டாவால் பிரகாஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஓசூர் ஹட்கோ போலீசார் சடலத்தை மீட்டனர். டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் விசாரணை நடத்தினார்.
தற்கொலை செய்து கொண்ட டாக்டர் பிரகாஷ், வனப்பகுதியில் இறக்கும் யானை மற்றும் பிற விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்வது, காயமடையும் வன விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பது போன்ற பணிகளை திறன்பட மேற்கொண்டவர். ஒருமுறை ஆட்கொல்லி யானையை பிடிக்கும் முயற்சியில், துப்பாக்கியால் யானை மீது, மயக்க ஊசி செலுத்த முடியாத நிலையில், யானையின் பின்னால் சென்று, அதன் மீது கையால் மயக்க ஊசியை செலுத்தினார். இதற்காக, தமிழக அரசின் விருது அவருக்கு கிடைத்தது. இவரது துணிச்சலான செயல்பாட்டிற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் பலமுறை விருது பெற்றுள்ளார்.
கடந்த, 2017 மே, 26 ல், கூட்டத்திலிருந்து பிரிந்த ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். அதற்கு, 45 நாட்கள் சிகிச்சையளித்து காப்பாற்றியவர் டாக்டர் பிரகாஷ் தான். அந்த யானை தான், ஆஸ்கர் விருது பெற்ற, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.