ADDED : அக் 03, 2026 04:58 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு
தற்காலிக உரிமம் வழங்குவது, பாதுகாப்பான பட்டாசு விற்பனை, அரசின்
வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
நடந்தது.
கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்து பேசியதாவது:தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக
பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், உரிய
ஆவணங்களுடன், வரும், 18-க்குள் அனைத்து இ--சேவை மையங்களிலும்
https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் டி.ஆர்.ஓ.,வுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம்
மட்டுமே பட்டாசு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். உரிமத்தை, தணிக்கை
அலுவலர்களின் தணிக்கையின் போது, பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க
வேண்டும். விதிகளை மீறுபவர்களின் உரிமத்தை ரத்து
செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட
எஸ்.பி., அனிதா, டி.ஆர்.ஓ., மஞ்சுளா, ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (பொது) முருகேசன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான்,
உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
