/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்த சுரங்கப்பாதை சாதனையாக அங்கீகரிப்பு
/
நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்த சுரங்கப்பாதை சாதனையாக அங்கீகரிப்பு
நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்த சுரங்கப்பாதை சாதனையாக அங்கீகரிப்பு
நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்த சுரங்கப்பாதை சாதனையாக அங்கீகரிப்பு
ADDED : அக் 30, 2025 01:35 AM
ஓசூர், ஓசூர் அருகே, நவீன தொழில்நுட்பத்துடன் குறைந்த நாட்களில் அமைத்த சுரங்கப்பாதை, சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா - தமிழக எல்லையை இணைக்கும் வகையில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்லையில் மட்டும், 45 கி.மீ., துாரத்திற்கு இச்சாலை செல்கிறது. இதில், கெலமங்கலம் - ஓசூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, காருகொண்டப்பள்ளி அருகே, ரயில் பாதையின் கீழ், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பெட்டி போன்ற, 6 கான்கிரீட் அமைப்புகள் அமைத்து, மிகப்பெரிய சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, மேல் பகுதியில் ரயிலும், கீழே வாகனங்களும் செல்லும் வகையில் அமைத்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இதுவரை நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு, 8 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 6.85 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான பெட்டி போன்ற கான்கிரீட்கள் செய்யப்பட்டு, 20 நாட்களுக்குள் நவீன தொழில்நுட்பம் உதவியுடன், ஜாக்கிகளை வைத்து, 24 மீட்டர் துாரம் நகர்த்தி, அதை சரியான இடத்தில் பொருத்தி சுரங்கப்பாதையை உருவாக்கி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்தியாவின் மான்டேகார்லோ நிறுவனம் இணைந்து, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இதை, 'ஏசியா புக் ஆப் ரெக்கார்டு' மற்றும் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' புத்தகங்கள் அங்கீகரித்துள்ளன. அதற்கான சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், ''ரயில்கள் தண்டவாள பாதையில் செல்லும் போதே, கிரிடர் உதவியுடன் இப்பணி செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை கான்கிரீட்டுகளை சரியாக பொருத்தி, ரயில்வே டிராக்கிற்கு எர்த் வைத்து, எக்பேக்மென்ட் கொடுத்து சரி செய்துள்ளனர். இது ஒரு பொறியியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வளவு நீளம், அகலமான சுரங்கப்பாதையை குறைவான நாட்களில் செய்தது கிடையாது. இது, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கே பெருமை,'' என்றார்.

