/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி இன மக்கள் தர்ணா
/
வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி இன மக்கள் தர்ணா
ADDED : செப் 09, 2025 02:31 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் கிருஷ்ணகிரி, சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட ராமன்தொட்டி, கும்பளம், சிகரலப்பள்ளி, நாயக்கனேரிமலை, பாம்புகாரன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள், தங்களுக்கு பட்டா வழங்க கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது:
சூளகிரி, கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்ட உள்ளிட்ட கிராமங்களில், 75 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வசிப்பவர்களுக்கு, வன உரிமை சட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த, 2023 மே, 1ல் நடந்த கிராமசபை கூட்டங்களில் மனு அளித்து தீர்மானம் நிறைவேற்றி, பட்டாவுக்கு விண்ணப்பித்தோம்.
வன உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் மீதான கோட்ட அளவிலான கூட்டம் கடந்த, 2024, நவ., 15ல், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., மற்றும் ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்திலும் நடந்தது. இதில், வீட்டுமனைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வன குழுவிற்கு பரிந்துரைக்கப் பட்டது. ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இதுவரை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.