கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற 2 குழுக்கள் அமைப்பு
கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற 2 குழுக்கள் அமைப்பு
ADDED : மார் 08, 2026 05:52 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சவுடேஸ்வரி கோவில் தெருவில் உள்ள உத்தமகரகம் கெரிகையம்மன் கோவிலுக்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலம், கெலமங்கலம், அண்ணா நகரில் உள்ளது.
இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டியுள்ளனர்.
அதேபோல், கெலமங்கலம் அருகே, போடிச்சிப்பள்ளி மாதேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், அஞ்செட்டி துர்க்கம் பகுதியில் உள்ளது. இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளனர்.
இந்த நிலங்களை மீட்கக் கோரி, திருத்தொண்டர்கள் அறக்கட்டளை சார்பில், 2023ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அறநிலையத்துறை தெரிவித்தது.
இதுகுறித்து, வரும், 12ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி தண்டபாணி, உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி, அறநிலையத்துறை சார்பில், இரு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கெலமங்கலம் அண்ணா நகரில் உள்ள உத்தமகரகம் கெரிகையம்மன் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாக, கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த இருவர் மீது, அறநிலையத்துறை ஆய்வாளர் வேல்ராஜ், கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
