/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன பஸ் மோதி இருவர் பலி
/
தனியார் நிறுவன பஸ் மோதி இருவர் பலி
ADDED : செப் 21, 2024 12:10 AM

ஓசூர்: ஒசூர் அருகே கெலமங்கலத்தில், நேற்று(செப்.,20) இரவு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் மோதி இருவர் பலியாகினர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்துக்கு காரணமான தனியார் நிறுவன பேருந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் குமார் 40, மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கலா, போடிச்சிப்பள்ளி பஞ்.,ல், 1 வது வார்டு உறுப்பினராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேஷ் 50, இவர்கள் இருவரும் நேற்று இரவு 10:15 மணிக்கு கெலமங்கலத்தில் இருந்து பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்றனர்.
கெலமங்கலம் கூட்ரோட்டில் சென்ற போது, ஓசூரில் இருந்து வன்னியபுரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், பைக் மீது மோதியது. இதில், கணேஷ் துாக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். குமார் பைக்குடன் பஸ்சில் சிக்கி சில அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இவ்விபத்தில், குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த கணேஷ், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்த போடிச்சிப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து 8க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் ராயக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கெலமங்கலம் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர்.