/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில்களில் ராம நாம கோஷத்துடன் வழிபாடு
/
கோவில்களில் ராம நாம கோஷத்துடன் வழிபாடு
ADDED : ஜன 23, 2024 10:15 AM
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜையோடு, புளியோதரை, தயிர் சாதம் என பலவகை அன்னதானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
* ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் சிறப்பு யாக வழிபாடு நடந்தது. செங்குந்தர் முதலியார் சங்கத் தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். செங்குந்தர் இளைஞர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், பாஜ.,வினர் ஜெயராமன், சிவா, சிவகுமார் மற்றும் ஊர்மக்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர். ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயணா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* ஊத்தங்கரை காமராஜ் நகர் முருகன் கோவிலில், பாஜ., சக்திகேந்திரா பொறுப்பாளர் ராஜ் தலைமையில், சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. இதில் பாஜ., மாவட்ட மகளிரணி துணை தலைவி முருகம்மாள், மாவட்ட செயலாளர் வரதன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில், சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
* போச்சம்பள்ளி சுற்று வட்டார கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பாரூர் வரதராஜ பெருமாள் கோவில், சந்துார் சிவன், வலசகவுண்டனுார் மாரியம்மன், எம்.ஜி.ஹள்ளி சிவன், அகரம் ஆஞ்சநேயர், விளங்காமுடி பெருமாள், வேலம்பட்டி ஆஞ்சநேயர், புலியூர் வினாயகர், பண்ணந்துார் ஆஞ்சநேயர், குடினேஹள்ளி பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் 'ராம், ஜெயராம்' என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோலாட்டம்
சூளகிரி தாலுகா, கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஒரு கோடி முறை ஸ்ரீராம நாமங்கள் கூறி வழிபாடுகள் நடந்தன. வேத விற்பனர்கள், 50 பேர் கொண்ட குழுவினர் ஒன்று சேர்ந்து, ஒரு கோடி முறை ஸ்ரீ ராம நாமங்கள் கூறினர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கி காலை, 10:00 மணி வரை ராமநாமங்கள் ஓதப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டில், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில், ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, 5,000 பேருக்கு அன்னதானம் மற்றும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டன. கண்ணை கவரும் வகையிலான கோலாட்டங்களும் நடந்தன.
அன்னபிரசாதம்
கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலையில் தரணி உணவகம் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று, மதியம், 1:00 மணி முதல் ஓட்டலுக்கு வரும் அனைவருக்கும் இலவச உணவை வழங்கினர். வழக்கமாக மதியம் சாப்பாடு விற்பனை செய்யப்படும் நிலையில், நேற்று அதை பிரசாதமாக மாற்றி அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படும் என, கடையின் முன்பு பேனர் வைத்திருந்தனர். அதை பார்த்த ஏராளமானோர் நேற்று தரணி உணவகத்தில் உணவு அருந்தி சென்றனர்.
மத நல்லிணக்கம்
ஓசூர் மாநகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட பஸ்தி பகுதியில், பா.ஜ.,வினர், ராமர் படத்திற்கு நேற்று சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து வழங்கப்பட்ட அன்னதானத்தை, இஸ்லாமிய இளைஞர்கள் பலர் வாங்கி சாப்பிட்டனர். இது, மத நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்பது, அங்கிருந்த மக்களுக்கு புரிந்தது.
ராமர் அலங்காரத்தில் பெருமாள்
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஓசூர் நேதாஜி ரோட்டிலுள்ள வெங்கடரமண சுவாமி கோவிலில், வாசவி கிளப் எலைட் ஓசூர் என்ற அமைப்பு சார்பில், அயோத்தியை போன்று கோவிலின் முன் செட் அமைத்திருந்தனர். கோவில் கருவறையில் மூலவர் பெருமாள், ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார்.
அயோத்தி போன்ற செட் அமைத்திருந்ததால், அதை பார்ப்பதற்கும், சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதேபோல், பா.ஜ., கட்சி சார்பில், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், தேர்ப்பேட்டை, பெரியார் நகர், நேதாஜி ரோடு, கர்னுார் உட்பட பல்வேறு இடங்களில், கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
300 ஆண்டுகள் பழமை
கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கிராமத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவில், 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் நுழைவாயில், 5 நிலைகள் கொண்டதாக உள்ளது. நுழைவாயிலில் யானை நுழையும் அளவுக்கு உயரமாகவும், பெரிய மரக்கதவுகளுடன் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. நாயக்கர் கால கட்டட கலையில் அமைந்துள்ளது.
தற்போது இக்கோவில் சேதம் அடைந்துள்ளதால், அருகில் புதிய கோவில் ஒன்றை கட்டி வருகின்றனர். நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இக்கோவிலில் உள்ள சீதா, ராமர், லட்சுமணன் உற்சவ சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகமும் நடத்தப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு, ராமர் கோவில் சிலைகளுக்கு பூஜை நடந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பாபிஷேகம்
அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தில், பழமையான ராமர் கோவில் உள்ளது. இக்கோவில் பக்தர்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அஞ்செட்டி சுற்று வட்டார கிராம பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் பெண்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து, அஞ்செட்டி சாலையில் மேள, தாளங்கள் முழங்க, ராமர் கோவில் வரை, ராமநாமம் கூறி ஊர்வலமாக சென்றனர்.

