/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு பாராட்டு விழா
/
டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு பாராட்டு விழா
ADDED : மார் 09, 2025 02:44 AM

மதுரை: மத்திய அரசின் 'பத்மஸ்ரீ விருது' பெறும் தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரியில் பாராட்டுவிழா நடந்தது.
சங்க பொருளாளர் மாரீஸ்குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்து பேசுகையில், விருது பெறும் டாக்டர் ஆர்.லட்சுமிபதியால் மதுரைக்கு பெருமை என்றார். மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், எந்த விஷயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி. அவரிடம் உள்ள நேர்த்தி, நேரம் தவறாமை போன்ற பன்முக தன்மை இளையதலைமுறைக்கு அவசியம் தேவை என்றார்.
மதுரை எம்.பி., வெங்கடேசன், சங்க துணை தலைவர் தாமோதரன், இணை செயலாளர்கள் பிரபாகரன், செல்வராஜன், புருேஷாத்தமன், உறுப்பினர் கண்ணன், மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: இவ்விருதை பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். வாழ்க்கை, நல்ல பழக்கவழக்கம், கல்வியை அவர்கள் அளித்ததால் பத்திரிகையாளராகவும், கல்வியாளராகவும் சாதிக்க முடிந்தது. எனக்குள் தேசப்பற்றையும் ஊட்டினர்.
எனக்கு முதுகெலும்பாக இருந்த குடும்பத்தினர், பக்கபலமாக இருந்த கல்வி நிறுவனங்கள், தினமலர் ஊழியர்களையும் வாழ்த்துகிறேன்.
சிறந்த வாழ்க்கைக்கு படிப்பு மிக அவசியம். வாழ்வில் நேர்மை வேண்டும். சமுதாய நலனில் எல்லோருக்கும் அக்கறை வேண்டும் என்றார்.
மன்னர் கல்லுாரி செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, தனியார் கல்லுாரிகளின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உதவி பேராசிரியர் ரஞ்சித் தொகுத்து வழங்கினார். தீனதயாளன் நன்றி கூறினார்.