/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாடக்குளம் கால்வாய், கரையை சீரமைக்க ரூ.17.53 கோடி
/
மாடக்குளம் கால்வாய், கரையை சீரமைக்க ரூ.17.53 கோடி
ADDED : செப் 07, 2024 05:50 AM
மதுரை: ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் உள்ள மாடக்குளம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் அதை தடுக்க நீர்வளத்துறை சார்பில் சுவர் கட்டுவது உட்பட பிற பணிகளுக்காக ரூ.17.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நபார்டு திட்டம், மாநில அரசு நிதியின் கீழ் மாடக்குளம் கண்மாய் கரை, கால்வாய் பணிகளுக்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொடிமங்கலம் பகுதியில் வைகையாற்றில் இருந்து தடுப்பணை கட்டப்பட்டு அதிலிருந்து 12.8 கி.மீ., நீள கால்வாய் வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து கிடைக்கிறது. இதில் மேலமாத்துார் பகுதியில் 2 ஷட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டு துவரிமான், கீழமாத்துார் கண்மாய்களுக்கு தனித்தனியாக தண்ணீர் விட திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்குடி அச்சம்பத்து வழியாக வரும் கால்வாயில் அப்பகுதி குடியிருப்புகளின் ஒட்டுமொத்த கழிவுநீர் விடப்படுகிறது. மேலும் குப்பை கொட்டியும் அசுத்தப்படுத்துகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் 1200 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இருபக்கமும் ஆறடி உயர சுவர் எழுப்பப்பட்டு கழிவுநீர் விடுவது தடுக்கப்படும். அதன்மேலே கம்பிவேலி அமைக்கப்பட்டு குப்பை கொட்டுவது தடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் கால்வாயைத் தாண்டி பொதுமக்கள் செல்லும் வகையில் இரண்டு இடங்களில் சிறிய பாலம் கட்டப்படும்.
அச்சம்பத்து முதல் முனியாண்டிபுரம் வரையான கண்மாயின் 3400 நீள கரையை பலப்படுத்தி கற்கள் பதிக்கப்படும். கண்மாயின் 3வது மடை கீழ்ப்பகுதியில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படும். இந்த பணிகளுக்காக ரூ.17.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு மழைக்காலம் முடிந்தபின் வரும் ஜனவரியில் பணிகள் தொடங்கும்.