/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாம்புக்கடிக்குள்ளான 711 பேருக்கு சிகிச்சை
/
பாம்புக்கடிக்குள்ளான 711 பேருக்கு சிகிச்சை
ADDED : மார் 02, 2025 04:13 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள நச்சுயிரியல் துறை வார்டு மூலம் 2024 ம் ஆண்டில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட 711 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தான் தேசிய சுகாதார இயக்கத்திற்கு தகவல்களை தெரிவிக்கும் வகையில் நச்சுயிரியல் சார்ந்த தகவல் மையம் செயல்படுகிறது. பாம்புக்கடியால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சையில் குணமடைந்தோர் குறித்த விவரங்கள் இந்த தகவல் மையத்தின் மூலம் தேசிய சுகாதார இயக்கத்திற்கு அனுப்பப்படும்.
அதன்படி 2024 ம் ஆண்டில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட 711 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இங்கு எல்லா வகையான பாம்புக்கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்து குறித்த தகவல்களுக்கு வார்டிலுள்ள சிறப்பு டாக்டர்கள் 24 மணி நேரமும் பதில் தரும் வசதியுள்ளது. மேலும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற 3200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டு மராமத்து பணிக்காக இங்குள்ள நோயாளிகள் தற்காலிகமாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். ரூ.25 லட்சம் மதிப்பில் 14 படுக்கைகளுடன் வார்டு மராமத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் நோயாளிகள் வார்டிற்கு மாற்றப்பட்டனர். நோயாளிகளுக்கான வசதிகளை டீன் அருள் சுந்தரேஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல் ஆய்வு செய்தனர். ஆர்.எம்.ஓ. சரவணன், பொது மருத்துவத்துறைத்தலைவர் நடராஜன், டாக்டர்கள் முரளிதரன், அழகவெங்கடேசன் உடனிருந்தனர்.