ADDED : ஜூலை 02, 2024 06:11 AM

மதுரை : மதுரை டவுன்ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த 72 கடைகளுக்கு அறநிலையத்துறை 'சீல்' வைத்தது.
இப்பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை, சர்வீஸ் செய்பவர்கள் குளத்தின் கரைகளை மறைத்து கடைகள் வைத்துள்ளதால் மைய மண்டபத்தில் உள்ள கலைநயமிக்க நீராழி மண்டபத்தின் தோற்றம் வெளியே தெரிவதில்லை. தவிர கடைகளின் கழிவுநீர், குப்பை சேருமிடமாகவும் தெப்பக்குளம் மாற்றப்பட்டது. இதனால் கடைகளை காலிசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை கூற, வியாபாரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அறநிலையத்துறைக்கு ஆதரவாக உத்தரவு கிடைத்த நிலையில் 99 கடைகளில் 72 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மற்ற கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அக்கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படவில்லை. இப்பணியில் அறநிலையத்துறை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் வளர்மதி, கோயில் உதவிகமிஷனர் யக்ஞநாராயணன் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.