/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸில் அமைகிறது கபடி உள்விளையாட்டு அரங்கு
/
ரேஸ்கோர்ஸில் அமைகிறது கபடி உள்விளையாட்டு அரங்கு
ADDED : செப் 16, 2024 04:49 AM
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கபடி உள்விளையாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளது.
இம்மைதானத்தில் கபடிக்கென தனி அரங்கு அமைக்கப்படவில்லை. பல்நோக்கு உள் விளையாட்டரங்கு அமைக்க திட்டமிட்ட போது வாலிபால், ஹேண்ட்பால், கபடி போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டரங்கு அமைத்தபின் இடவசதி இன்மையால் தற்போது பாட்மின்டன் விளையாட்டுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.
400 மீட்டர் தடகள டிராக் முன்பகுதியில் உள்ள இடத்தில் செம்மண் தரையில் தற்காலிகமாக 3 அரங்குகளுக்கு சுண்ணாம்பு பொடியால் கோடுகள் வரையப்பட்டு கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கபடி போட்டிக்கு நிரந்தரமாக உள்விளையாட்டு அரங்கு தேவை என வீரர்கள் கோரிக்கை வைத்த நிலையில் கடந்தவாரம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அதற்கான இடவசதியை ஆய்வு செய்தனர். விளையாட்டு விடுதியின் அருகில் உள்ள கால்பந்து அரங்குக்கு முன்புள்ள இடத்தில் மைதானம் கட்டுவதற்கு வாய்ப்புள்ளதா என ஆலோசனை செய்தனர். விரைவில் கட்டுமானத்தை துவக்கினால் மாணவர்கள் மின்னொளியில் பயிற்சி பெற்று போட்டிகளிலும் பங்கேற்க முடியும்.