/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறையில் நண்பனை பார்க்க காரை எரித்து கைதியானவர்
/
சிறையில் நண்பனை பார்க்க காரை எரித்து கைதியானவர்
ADDED : ஆக 06, 2024 12:21 AM

மதுரை:மதுரை செல்லத்தம்மன் கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். தன் காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார்.
அப்போது காரின் முன்பகுதி எரிந்தும், கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மதுரை, கீழமாசிவீதியைச் சேர்ந்த சிவகுமார், 21, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
மதுரை, வடக்கு மாசி வீதி கருக்குவாலையன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 26. இவரும் சிவகுமாரும் நண்பர்கள். தினேஷ் அவ்வப்போது சிவகுமாருக்கு உணவு, மது வாங்கிக் கொடுப்பார். ஜூலை 29ல் வாள் வைத்திருந்ததாக தினேஷை திலகர் திடல் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்
அதனால், ஒரு வாரமாக உணவின்றி தவித்த சிவகுமார், நண்பனை பிரிந்திருக்க முடியாமல் சிறைக்கு சென்று அவரை பார்க்க நினைத்தார். சில நாட்களுக்கு முன் தன்னையும் கைது செய்ய போலீசாரிடம் கெஞ்சினார். அது நடக்காத நிலையில், காரை தீயிட்டு கொளுத்தியது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.