மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தினமும் ஒரு பிரச்னை * நிரந்தர தீர்வின்றி கடைக்காரர்கள் வேதனை
மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தினமும் ஒரு பிரச்னை * நிரந்தர தீர்வின்றி கடைக்காரர்கள் வேதனை
ADDED : மே 06, 2026 07:41 PM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர், சாக்கடை அடைப்பு என தினந்தோறும் பிரச்னையால் கடைக்காரர்கள், பொதுமக்கள் தவிப்பதாக அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஒருநாள் மழைக்கே மார்க்கெட் முழுவதும் சகதிக்காடாக மாறி விட்டது. தொழிலாளர்கள் தோளில் மூடையுடன் வெறும் காலில் நடக்கும் போது வழுக்கி கீழே விழுவதால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. பொதுமக்களும் இதுபோல பாதிக்கின்றனர். கழிவுநீர் வாய்க்கால் துார்ந்து மேடானதால் மழைநீர், கழிவுநீர் எதுவும் உடனே வெளியேறுவதில்லை.
முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் அமைத்த தொட்டி தினமும் நிரம்பி பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக தரையில் தேங்குகிறது. வெங்காய கடைகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாமல் வாகனங்களின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கி விடுகின்றன. தினமும் ஒரு பிரச்னையோடு கடைக்காரர்கள் போராடுகிறோம்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் தற்காலிகமாக சரிசெய்கின்றனர். நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. மாநகராட்சி கமிஷனர் சித்ரா மார்க்கெட்டை ஆய்வு செய்து சுகாதாரமான இடமாக மாற்ற வேண்டும் என்றார்.
