ADDED : ஜூலை 18, 2024 04:22 AM

மேலுார், : அரிட்டாபட்டி அதியங்கூட்டத்தினர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு குல தெய்வங்களை வழிபடும் ஆடி களரி உற்ஸவ விழாவை கொண்டாடினர்.
இதையொட்டி ஜூலை 12 முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். ஜூலை 16 அழகர்கோயில் சென்று தீர்த்தம் ஆடினர். நேற்று (ஜூலை 17) சூளைமேடு பொட்டலில் இருந்து பெண்கள் ஓலைப் பெட்டியில் வழிபாட்டுப் பொருட்கள், அதியங்கூட்டத்தினர் செய்த புரவியை சுமந்தபடி கட்டக்குடுமி அய்யனார் கோயிலுக்கு சென்றனர்.
இன்று (ஜூலை 18) தர்மம் ஊருணியில் தீர்த்தமாடிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்திய 50 கிடாக்கள், 200 கோழிகளை பலியிட்டு பொங்கல் வைப்பர். பின் மக்களுக்கு கறி விருந்து வழங்கப்படும். நாளை (ஜூலை 19) கோயில் வீடு முன்பு பணியாரம், சைவ உணவு சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவர். ( ஜூலை 20) களரி உற்ஸவத்தில் பங்கேற்ற உறவினர்களுக்கு மரியாதை செய்யும் (பெட்டி கட்டுதல்) நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை அதியங்கூட்டத்தினர் செய்துள்ளனர்.