/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 40 சதவீதமே குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தகவல்
/
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 40 சதவீதமே குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தகவல்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 40 சதவீதமே குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தகவல்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 40 சதவீதமே குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தகவல்
ADDED : ஆக 08, 2024 05:03 AM
மதுரை: ''தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகவே உள்ளது'' என இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தலைவர் பாலசங்கர் மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த தாய்ப்பால் வாரவிழாவில் தெரிவித்தார்.
விழாவில் டீன் தர்மராஜ் தலைமை வகித்தார். குழந்தைகள் நல ஆராய்ச்சித்துறை இயக்குநர் நந்தினி, ஆர்.எம்.ஓ., சரவணன், துணைக் கண்காணிப்பாளர் செல்வராணி முன்னிலை வகித்தனர்.
இதில் டாக்டர் பாலசங்கர் பேசியதாவது: சில தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து பெண்கள் வீடு திரும்பும் போது பாட்டில் பாலுக்கான குறிப்புகளையும் எழுதித் தருகின்றனர்.
இது தவறான அணுகுமுறை. தனியார் மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்களில் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பது அறியாமையே. தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாக வளராது என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் போதும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலை சேகரித்து பிரிட்ஜில் வைத்து குழந்தைகளுக்கு புகட்டச் சொல்ல வேண்டும் என்றார்.
பேராசிரியர் ராஜ்குமார் பேசியதாவது: குழந்தை பிறக்கும் போது மூளையின் வளர்ச்சி 60 சதவீதம்தான்.
முதலாண்டில் மூளையின் வளர்ச்சி 80 சதவீதமாக அதிகரிக்கும். தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி அடையும். தாய்ப்பாலில் ஒமேகா 3, அமினோ அமிலங்கள் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளதால் அதனைக் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன் (ஐ.கியூ.) 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக இருக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதால் இருமல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் குறைவாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, டாக்டர்கள் ஜவஹர், ஷியாம் ஆனந்த், கண்ணன் கலந்து கொண்டனர்.