/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சவால்
/
மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சவால்
ADDED : மார் 29, 2024 06:32 AM

மதுரை : ''அ.தி.மு.க., ஆட்சியில் நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். தி.மு.க., கேட்க முடியுமா,'' என, மதுரையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி சவால் விடுத்தார்.
பழங்காநத்தத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
மதுரை அ.தி.மு.க., கோட்டை. ஒரு ஓட்டுக்கூட விடப்படாமல் இருக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும். தி.மு.க., என்றாலே தில்லுமுல்லு கட்சி. அதன் கூட்டணி வேட்பாளர்தான்(வெங்கடேசன்) இங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் 5 ஆண்டுகாலம் என்ன செய்தார். அவரை கண்டா வரச்சொல்லுங்க. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. ஐந்தாண்டுகளாகி விட்டது. தி.மு.க., கூட்டணி கட்சிகளின் 38 எம்.பி.,க்கள் பார்லிமென்ட் பெஞ்சை தேய்ச்சதுதான் மிச்சம்.
உதயநிதி... செங்கல்லை துாக்கி ரோட்டில் காண்பிச்சா என்ன பிரயோஜனம். பார்லிமென்ட்டில் காண்பித்திருக்க வேண்டாமா. அதற்கு தில்லு திராணி வேண்டும். அது அ.தி.மு.க.,வுக்கு மட்டும்தான் உண்டு.
தி.மு.க., செய்த சாதனைகளை ஸ்டாலினும், உதயநிதியும் சொல்ல தயாரா. இவர்களுக்கு ஓட்டளித்து என்ன பிரயோஜனம். தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளில் அதிகாரம் வேண்டும். அப்போதுதான் கொள்ளை அடிக்க முடியும்.
ஸ்டாலினுக்கு புதுபட்டம்
மத்தியில் பா.ஜ., காங்., ஆட்சியில் கூட்டணி அமைத்து 12 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. 12 ஆண்டுகளில் மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டார்களா. காவிரி, முல்லைபெரியாறு பிரச்னைக்கு தீர்வு கண்டார்களா. கொள்கை இல்லாத கட்சி தி.மு.க., எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது 'கோ பேக் மோடி' என்றார். இப்போது 'வெல்கம் மோடி' என்கிறார். இரட்டை வேடம் போடும் தலைவராக உள்ளார். செஸ் போட்டியை துவக்கி வைக்க வந்த மோடிக்கு கருப்பு குடையை காட்டாமல் வெள்ளை குடையை காட்டியவர்தான் ஸ்டாலின். அவருக்கு 'வெள்ளை குடை ஏந்திய பொம்மை வேந்தர்' என பட்டம் சூட்டலாம்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க., வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம். அது பொறுக்க முடியாமல் தோல்வி பயத்தில் கள்ளகூட்டணி வைத்துள்ளதாக ஸ்டாலின், உதயநிதி கூறுகிறார்கள். விரக்தியில் அ.தி.மு.க.,வை பற்றியும், என்னை பற்றியும் விமர்சிக்கிறார்கள். ஸ்டாலின் 2021 சட்டசபை தேர்தலில் 520 வாக்குறுதிகளை அளித்தார். அதில் 10 சதவீதத்தைகூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது 2010 காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில்தான். 2019, 2021, 2024 தேர்தல்களில் நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க.,
நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., சட்ட போராட்டம் நடத்தியது. ப.சிதம்பரத்தின் மனைவி நளினி நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆஜராகி உத்தரவு பெற்றார். அதற்கு பதிலாக அ.தி.மு.க., ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. மருத்துவ படிப்பிற்கான செலவை அ.தி.மு.க., அரசே ஏற்றது. நாங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். தி.மு.க.,வால் கேட்க முடியுமா.
கடன் வாங்குவதில் முதலிடம்
ஊழல், போதை பொருள் கடத்தல், கடன் வாங்குவதில், சட்டம் ஒழுங்கு கெட்டு போனதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., அரசு 3 ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. 2.50 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவர். அது உங்கள் தலையில்தான் விடியும்.
ஒரு திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டு ஒரு குழு அமைப்பார். எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் அரசாக உள்ளது. இதுவரை 52 குழுக்களை அமைத்துள்ளது. குழு அமைத்தால் அதோடு அந்த திட்டம் முடிந்து போய்விடும்.
குழு அரசாங்கமாக தி.மு.க., உள்ளது. அமைச்சர் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது நிதி மேலாண்மையை சரிசெய்ய குழு அமைத்தார்கள். அதற்குபிறகுதான் 3.50 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். கடன் வாங்குவதற்காகவே குழு அமைத்தது தி.மு.க., அரசு.
அ.தி.மு.க.,வை மிரட்ட முடியாது
அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறார். நாங்கள் நினைத்திருந்தால் அ.தி.மு.க., ஆட்சியில் உங்கள் மீது நிறைய வழக்குகளை போட்டிருப்போம். நிறைய ஊழல் செய்துள்ளீர்கள். அது எங்கள் வேலை அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி. அ.தி.மு.க., ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம். இவ்வாறு பேசினார்.
மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன் செல்லப்பா, உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்பபிரிவு சார்பில் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்ற பாடல் வெளியிடப்பட்டது.

