/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., கூட்டங்களில் பங்கேற்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை; கமிஷனரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

ADDED : மார் 08, 2025 04:02 AM
மதுரை : 'மதுரை மேற்கு சட்டசபை தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம் அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ உள்ளார். மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து இத்தொகுதியை அ.தி.மு.க., தக்க வைத்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் இத்தொகுதியை தி.மு.க., கைப்பற்ற அமைச்சர் மூர்த்திக்கு கூடுதலாக மாவட்ட செயலாளர் பொறுப்பை அக்கட்சி வழங்கியது. இதையடுத்து மக்கள் குறைதீர் கூட்டம் என்ற பெயரில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடத்தி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அக்கூட்டங்களில் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில்தான் கமிஷனர் சித்ராவை சந்தித்து, 'கட்சிக் கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்பதை கண்டிக்க வேண்டும். அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளிலும் இதுபோன்ற கூட்டங்கள் தி.மு.க., நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது' என முறையிட்டனர்.
கமிஷனர் சந்திப்புக்கு பின் சோலைராஜா கூறுகையில், தி.மு.க., நிர்வாகிகளை வைத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளாட்சித்துறை சட்டத்திற்கு எதிரானது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் பொறுப்பு ஏற்றாலும் செல்லுார் ராஜுவின் வெற்றியை தடுக்க முடியாது, அத்தொகுதியில் அவர் 4வது முறை வெற்றி பெறுவார் என்றார்.