/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதியில்லாத ஆனையூர் ஸ்ரீநகர் தவிப்பில் குடியிருப்போர்
/
அடிப்படை வசதியில்லாத ஆனையூர் ஸ்ரீநகர் தவிப்பில் குடியிருப்போர்
அடிப்படை வசதியில்லாத ஆனையூர் ஸ்ரீநகர் தவிப்பில் குடியிருப்போர்
அடிப்படை வசதியில்லாத ஆனையூர் ஸ்ரீநகர் தவிப்பில் குடியிருப்போர்
ADDED : ஆக 05, 2024 06:10 AM

மதுரை: மதுரை ஆனையூர் அருகே மண்டலம் 1, வார்டு 4ல், பொதிகை நகர் 3வது தெரு, தியாகி மலையான் நகர் - புதுவசந்தம் 3வது தெரு உள்ளிட்ட தெருக்களின் விரிவாக்கப் பகுதியாக ஸ்ரீநகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ரோடு, தெருவிளக்கு, பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஸ்ரீநகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் கண்ணதாசன், செயலாளர் மணிகண்டராஜ், பொருளாளர் ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள் ராமர், சரவணன், கந்தசாமி, அழகர்சாமி, கருப்புராஜா, சண்முகம் கூறியதாவது:
இங்கு 2 முதன்மை தெருக்கள், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புதுவசந்தம், பொதிகை தெருக்கள் வரை ரோடு அமைத்துள்ளனர். ஆனால் விரிவாக்கப் பகுதியான இங்கு ரோடு வசதி இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்ட போது அடுத்த முறை அப்ரூவல் கிடைத்தவுடன் அமைப்பதாக கூறினர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அமைக்கவில்லை.
முட்டளவு மழைநீர்
மண் ரோடு என்பதால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக முட்டளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் பள்ளிக் குழந்தைகள் சிரமத்திற்கு நடுவே பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர தேவைக்கு ஆட்டோக்களும் வருவதில்லை. குடிநீருக்கு மாநகராட்சி, தனியார் லாரிகளையே நம்பியுள்ளோம். குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இங்கு எப்போது துவங்கும் எனத் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த கமிஷனரிடம் இப்பகுதியில் மட்டும் பாதாள சாக்கடைப் பணி நடக்காததை தெரிவித்தோம். அதன்பின்னும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.
குறைந்தழுத்த மின்சாரம்
இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாவதால், மின்அழுத்தம் பாதித்து மின்சாதனங்கள் பழுதாகின்றன. திருப்பாலை மின்சார வாரியம் உள்பட பலரிடமும் புகார் அளித்தும் பயனில்லை. இரண்டு முதன்மை தெருக்களிலும் தெருவிளக்குகள் கிடையாது.
இதனால் சிலர் இரவில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். புதர் மறைவில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இங்கு தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இதனால் குழந்தைகள் கூடி விளையாட முடியவில்லை.
மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் தலையிட்டு பாதாள சாக்கடை, குடிநீர், ரோடு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.