/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி: செல்லுார் ராஜூ
/
அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி: செல்லுார் ராஜூ
ADDED : ஆக 26, 2024 09:38 AM
மதுரை : அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டிதான். இரண்டு முறை அமைச்சராக இருந்த என்னை உலகத்திற்கே தெரியும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழக அரசியலில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளேன்.
ஆனால் மதுரையை தாண்டி என்னை யாருக்கும் தெரியாது என்கிறார். உலகத்தில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அண்ணாமலை ஒருமுறையாவது வெற்றி பெற்றுள்ளாரா.
எம்.ஜி.ஆர்., ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர். அவரது 100 ரூபாய் நாணயத்தை அப்போது பிரதமர் மோடியை வைத்து வெளியிட்டிருந்தால் மதம் சார்ந்து பேசப்பட்டிருக்கும். இதனால்தான் மோடியை அழைக்கவில்லை. கருணாநிதி நாணயத்தை தற்போது தி.மு.க., ரூ.10 ஆயிரத்திற்கு 'பிளாக்'கில் விற்கிறது.
நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதியை புகழ்ந்து பேசி வருகிறார். எம்.ஜி.ஆரை இதுவரை யாரும் வென்றவர் இல்லை.
கொரோனா பாதிப்பு காலத்தில் பழனிசாமியின் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. 'தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது' என பிரதமர் மோடி தெரிவித்தார். பல புயல்கள், வறட்சியை சமாளித்ததில் பழனிசாமியின் நிர்வாக திறமையை மக்கள் அறிவர். தற்போதைய தி.மு.க., இரண்டு புயல்களை கூட சமாளிக்க முடியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை வர முழுக்காரணம் ஜெயலலிதாதான். தற்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
ஆனால் மதுரைக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

