ADDED : ஜூன் 20, 2024 05:06 AM

மதுரை: மதுரையில் விரைந்து செல்லும் வாகனங்களுக்கான பிரதான ரோடுகளின் பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் விபத்து அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலைகள், நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் மேம்பாலங்கள் போன்றவை விரைவு வாகனங்களின் வசதிக்காகவே அமைக்கப்படுகின்றன. மதுரையில் இத்தகைய மேம்பாலங்களில் சமீப நாட்களாக சிறிய வேகத்தடைகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றனர். மதுரை பைபாஸ் ரோடு - காளவாசல் சந்திப்பு பாலம், செல்லுார் மேம்பாலம், போடி ரயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் 'இறக்க'மான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இருப்பது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு இல்லை. நெடுஞ்சாலைகளில் இவற்றை கவனியாமல் வரும் வாகனங்கள் விழ அதிக வாய்ப்புள்ளது.
பொதுவாக பிரதான சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க விதியில்லை. சர்வீஸ் ரோடுகளில்தான் வேகத்தடை அமைப்பது வழக்கம். அதற்கு மாறாக நெடுஞ்சாலைகளில் அமைத்துள்ளது ஏனென்று தெரியவில்லை.
கோட்ட பொறியாளர் மோகன காந்தி கூறியதாவது: கலெக்டர் தலைமையில் நடந்த சாலைப் பாதுகாப்பு கூட்டம் நடந்தபோது விபத்து பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது சாலை பாதுகாப்பு குழு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரோட்டை கடக்க சுற்றிச் செல்லும் நிலையில், பலர் மீடியன்களின் சிறு இடைவெளிகளில் நுழைந்து ரோட்டின் மறுபக்கம் செல்கின்றனர். அதுபோன்ற 230 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதசாரிகளை பாதுகாக்க அந்த இடைவெளிகளை அடைத்துள்ளோம்.
மேலும் 5 மேம்பாலங்களில் 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். அவை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.