ADDED : ஜூன் 15, 2024 06:25 AM

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பழைய செயற்கை தடகள டிராக்கின் மீது பூசப்பட்டிருந்த ரப்பர் துகள்கள் அகற்றப்பட்டு மீண்டும் புதிய டிராக் அமைக்கும் பணி நடக்கிறது.
2006ல் ரூ. 3 கோடி செலவில் 400 மீட்டருக்கான செயற்கை ரப்பர் தடகள டிராக் அமைக்கப்பட்டது. 18 ஆண்டுகள் கடந்த நிலையில் ரப்பர் துகள்கள் பெயர்ந்து சேதமடைந்ததால் புதிய டிராக் அமைக்க ரூ.8.25 கோடி ஒதுக்கப்பட்டது. தரைத்தளத்தின் மீது தார் பூசி அதன் மேல் ரப்பர் துகள்கள் பூசப்பட்டிருந்தன. இரண்டு மாதங்களாக பழைய ரப்பர் துகள்களை அகற்றும் பணி நடந்து முடிந்து, அடுத்த அடுக்கில் உள்ள தார்த்துகள்கள் தற்போது அகற்றப்படுகின்றன. இப்பணி முடிந்த பின் புதிதாக பொருத்துவதற்கான கருப்பு, சிவப்பு ரப்பர் துகள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
400 மீ., செயற்கை தடகள டிராக், அதன் அருகிலேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலுக்கான ரப்பர் தடகள டிராக் பொருத்தப்படும். தடகள டிராக் உட்புறத்தில் இயற்கை வகை கொரியன் புற்களை கொண்டு கால்பந்து அரங்கு உருவாக்கப்படும். ஓராண்டு காலம் திட்டமிட்ட நிலையில் 2 மாதங்கள் பணி முடிந்துள்ளது. இன்னும் 10 மாதங்களில் செயற்கை தடகள டிராக், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் தயாராகும்.
மதுரையில் 400 மீ., டிராக் பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்டத்திற்கான குறுவட்டம், மாவட்டம், மண்டல தடகளப் போட்டிகள் கடந்தாண்டு வரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்தான் நடத்தப்பட்டன. இப்போது தடகள டிராக் அமைக்கும் பணி நடப்பதால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும்.