எனக்கு 50 வயது. சற்று பருமனாக உள்ளேன். காலையில் எழுந்ததும் குதிகால் வலி ஏற்படுகிறது. பின்னர் வலி தெரிவதில்லை. இதன் அறிகுறி என்ன. வலி வராமல் தடுப்பது எப்படி.
- ரவீந்திரன், மதுரை
குதிகால் எலும்பிலிருந்து 'குதிநாண் தட்டைச்சதை' எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுகொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு வீக்கம் உண்டாகி குதிகால் வலி ஏற்படும்.
குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ஒரு 'திரவப்பை' உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கினாலும் குதிகால் வலி வரும். ஒரு சிலருக்கு குதிகால் எலும்பு, திசுக்கொத்து சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்வதாலும் வலி ஏற்படும்.
இப்பிரச்னை உள்ளவர்கள் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதில் இருந்தே நீச்சல், நடைபயிற்சி, மெல்லோட்டத்தில் ஈடுபட்டு வந்தால் குதிகால் வலி வருவது தடுக்கப்படும். வலி வந்தபின் பிரத்யேக தசைப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சைக்கிள் ஓட்டுதல் நல்ல பயிற்சி. முன்பாதத்தில் அழுத்தம் கொடுத்து பெடல் செய்வதால் மொத்த பாதத்திற்கும் ரத்தஓட்டம் அதிகரித்து வலி குறையும்.
உடல்பருமனாக இருப்பவர்கள் எடையை குறைத்தால் வலி குறையும். வீட்டுக்குள்ளும் மிருதுவான ரப்பர் காலணி அணிந்து நடப்பது நல்லது. நீரிழிவு நோய், கவுட் நோய் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும். பாதத்துக்கு சரியான அளவில் காலணி அணிய வேண்டும். புகை பிடிக்கக்கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களை சுருக்கி ரத்தஓட்டத்தை தடுக்கும். அதனால் குதிகால் பகுதியில் ரத்தஓட்டம் குறைந்து வலி ஏற்படும்.
-- டாக்டர் கணேசன்பொது மருத்துவ நிபுணர்ராஜபாளையம்
குழந்தைகளுக்கு எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்
- -நவீன், திண்டுக்கல்
குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்து ஓரளவிற்கு வளரும் வரை எலும்புகள் மெதுவானதாக இருக்கும். அவற்றை வலுப்படுத்தும் விதமாக புரதச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். பொதுவாக எல்லோரும் முட்டை, பிரண்டைக்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது. பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். சதையை உறுதிப்படுத்தினால் நம் உடலில் தேய்மானமாகும் எலும்புகளை தடுக்கலாம்.
- -டாக்டர் லலித்குமார்எலும்பு சிகிச்சை பிரிவு துறை உதவி பேராசிரியர்அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி, திண்டுக்கல்
ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் எதனால் வருகிறது? வராமல் தடுப்பது எப்படி.
- -எஸ்.கீர்த்தனா, போடி
புகை பிடிப்பவர்கள், சளி, இருமல் காசநோய் இருப்பவர்கள் குழந்தைகளை துாக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் அதிக அளவு பரவுகிறது. இதனை தடுக்க குழந்தைகளுக்கு முன்பாக இருமல், தும்மல் கூடாது. கைகளை நன்கு கழுவிய பின் குழந்தைகளை துாக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் ஏற்படும். காய்ச்சலுக்கு குறைந்தது 10 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு 120 மி.கி., பாராசிட்டமல் மாத்திரை ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அவசியப்பட்டால் சளி டானிக் கொடுக்கலாம். இருமல் துவக்கம், இளைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, சுணக்கம் ஏற்படுவது இருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய ப்ளூ ஊசி, நிமோனியா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ அடிப்படையில் துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிது அளவு கொடுப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி மட்டும் இன்றி சளி, இருமல், காய்ச்சல் வருவதை கட்டுப்ப்படுத்தலாம்.
-- டாக்டர் எஸ்.ரவீந்திரநாத்
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்
அரசு மருத்துவமனை, போடி
கண்களில் துாரப்பார்வை தெளிவில்லாமல் கலங்கலாக தெரிகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
--பி.செல்லமணி, ராமநாதபுரம்.
கண்புரை நோய் காரணமாக இது போன்ற துாரப்பார்வை பாதிப்பு இருக்கும். மங்கலாகவும், தெளிவு இல்லாமலும், கலங்கலாக தெரியும். வெளியில் துணையில்லாமல் செல்ல முடியாது. கண்புரை பாதிப்புகளை எளிய முறையில்ஆப்பரேஷன் மூலம் சரி செய்யலாம். இயற்கையான லென்சைகண்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு இன்ட்ரா ஆக்கர் லென்ஸ் என்ற செயற்கை லென்ஸ்பொருத்திக்கொண்டால் பாதிப்பு சரியாகிவிடும். கண்புரை ஆப்பரேஷன் செய்யும் போது ரத்த அழுத்தம், சக்கரை நோய் பாதிப்புள்ளவர்கள்தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆபரேஷனுக்குபயப்படத் தேவையில்லை. ஒரே நாளில்வீடு திரும்பி விடலாம்.
- டாக்டர் எஸ்.ஆனந்த்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
பல் சிதைவு ஏன் ஏற்படுகிறது. எவ்வாறு பாதுகாப்பது
-அ.சிவா,சிவகங்கை.
பல் சிதைவு என்பது அதிக நேரம் பல் துலக்குவதால் ஏற்படும். சர்க்கரை மற்றும் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதாலும், இரவு நேரங்களில் துாங்கும் போது பல்லை கடிப்பதாலும், கடினமான பிரஷ் பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. சரியான காரணமின்றி வரும் பல்வலி, இனிப்பு மற்றும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை சாப்பிடும் போது ஏற்படும் பல்வலி பல் சிதைவுக்கான அறிகுறி. தினமும் இரண்டு முறை பல் துலக்கவேண்டும். அதுவும் 2 நிமிடம் மட்டுமே பல் துலக்க வேண்டும்.
- -டாக்டர் ஜெ.விஜயபாரத்
அரசு பல் மருத்துவர்
அரசு மருத்துவமனைகாளையார்கோவில்