ADDED : ஆக 05, 2026 10:52 PM
மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில், தமிழ் இசைச் சங்கம் சார்பில் ராஜா முத்தையா செட்டியாரின் 122வது பிறந்தநாள் விழா நடந்தது. சங்கத்தின் மூத்த அறங்காவலர் மோகன்காந்தி வரவேற்றார்.
மேடை, ‘டிவி’ நாடக நடிகரான ஸ்ரீனிவாசனுக்கு பொற்கிழி வழங்கி மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பேசுகையில், ‘‘2000 ஆண்டுகளை கடந்த 6 மொழிகளில் சீனமும், தமிழும் தான் நடைமுறையில் உள்ளன. மதுரையின் வைகை நதி நாகரிகம், கீழடி அகழ்வாராய்ச்சிக்கு பின் தமிழ் மொழி மேலும் 600 ஆண்டுகளை கடந்து பழமையானது என்ற பெருமை தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. மதுரை இருக்கும் வரை, தமிழ் மொழி இருக்கும். மொழிக்கு முன்னால் பிறந்தது இசை. அந்த தமிழிசைக்கு பல வழிகளில் பெருமை சேர்த்தவர் ராஜா முத்தையா செட்டியார்,’’ என்றார்.
சங்க அறங்காவலர் ராமசாமி நன்றி கூறினார். அறங்காவலர்கள் பழனியப்பன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
