/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லட்சுமி தீர்த்த குளத்தில் கருங்கல் தளம் அமைப்பு
/
லட்சுமி தீர்த்த குளத்தில் கருங்கல் தளம் அமைப்பு
ADDED : மார் 03, 2025 05:07 AM

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளத்தில் ரூ. 6.50 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக குளத்தின் மேல் பகுதியை சுற்றிலும் 4 மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியின் 4 மூலைகளிலும் இருந்த கருங்கற்கள் இடிந்து விழுந்துவிட்டன. அக்குளத்தின் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்களைக் கொண்டு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல்கள் ஒட்டப்படுகின்றன.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா ஆலோசனைப்படி, புதிதாக திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றி 4 அடி உயரத்திற்கு சிமென்ட் துாண்கள் அதன்மேல் பகுதியில் சுதை வேலைகள், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பிருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றி மேல்பகுதியில் 4 மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
சத்யபிரியா கூறுகையில், ''90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. திருக்குளத்தை பெயருக்கு ஏற்றார் போல் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. திருக்குளத்தை பாதுகாக்க சுற்றிலும் கருங்கல் தளம் அமைக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்குள் பணிகள் நிறைவடையும்'' என்றார்.