/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுத்தாவணியில் மலர்ச்சி: 18 ஆண்டு பூக்கழிவு பஞ்சாயத்துக்கு தீர்வு
/
மாட்டுத்தாவணியில் மலர்ச்சி: 18 ஆண்டு பூக்கழிவு பஞ்சாயத்துக்கு தீர்வு
மாட்டுத்தாவணியில் மலர்ச்சி: 18 ஆண்டு பூக்கழிவு பஞ்சாயத்துக்கு தீர்வு
மாட்டுத்தாவணியில் மலர்ச்சி: 18 ஆண்டு பூக்கழிவு பஞ்சாயத்துக்கு தீர்வு
ADDED : ஜூலை 05, 2024 05:11 AM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் குவிந்து வரும் குப்பையை அள்ளி பராமரிப்பதில் 18 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் முற்றுப்புள்ளி வைத்தார்.
இங்கு 104 பூக்கடைகள் உட்பட 307 கடைகள் உள்ளன. இங்கு சேரும் குப்பையை அள்ளி பராமரிக்க மாவட்ட வேளாண் விற்பனைக் குழுவுக்கு மாதம் ஒரு கடைக்கு தலா ரூ.600 வீதம் கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் குப்பை சரிவர அள்ளுவதில்லை என வியாபாரிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதனால் மழைக் காலத்தில் பூ மார்க்கெட்டில் சேறும் சகதியுமாக கிடப்பது உள்ளிட்ட சர்ச்சை எழுந்தது.
மார்க்கெட்டில் சேரும் குப்பையை அகற்ற மாநகராட்சிக்கு வியாபாரிகள் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் 'குப்பை அகற்றுவதற்கான கட்டணம் வேளாண் விற்பனைக் குழுவிற்கு கொடுத்துவிட்டு மாநகராட்சியை அகற்ற கோருவது எப்படி சாத்தியம்' என அதிகாரிகள் கேட்டு வந்தனர். ஆனாலும் அதிக குப்பை சேரும்போது மனிதாபிமான அடிப்படையில் மாநகராட்சியே குப்பையை அள்ளி பராமரித்தது. எனவே பூ மார்க்கெட்டில் குப்பை பிரச்னை வியாபாரிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் சிங்கராஜ், தர்மர், போஸ் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
ராமச்சந்திரன் கூறியதாவது: மாநகராட்சி இடத்தை வேளாண் விற்பனை குழு மூலம் வாங்கி ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்பட்டது. 2006ல் அப்போதைய மத்திய அமைச்சர் அழகிரி திறந்து வைத்தார். மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு பூக்கழிவு, நார் குவியல் உட்பட 2 டன் குப்பை சேருகிறது. அவற்றை அள்ள விற்பனை குழுவிற்கு ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.600 கட்டணமாக செலுத்தியும் குப்பை அகற்றப்படுவதில்லை. கடைகள் சார்பில் சொத்து வரி, பாதாளச் சாக்கடை, குடிநீர் வரி செலுத்துவதால் மாநகராட்சியே குப்பையை அள்ள வேண்டும் என கமிஷனரிடம் வலியுறுத்தினோம்.
'குப்பை பராமரிப்பு தொகையை மாநகராட்சிக்கு செலுத்தினால் மாநகராட்சியே பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார்.
இதையடுத்து 18 ஆண்டுகளாக நீடித்த குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. வரும் மாதம் முதல் 307 கடைகள் சார்பிலும் குப்பை பராமரிப்பு தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளோம் என்றார்.
மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு பூக்கழிவுநார் குவியல் உட்பட 2 டன் குப்பை சேருகிறது. அவற்றை அள்ள விற்பனை குழுவிற்கு ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.600 கட்டணமாக செலுத்தியும் குப்பை அகற்றப்படுவதில்லை.