/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்வேலிபட்டியில் கால்வாய் ஆக்கிரமிப்பு
/
கள்வேலிபட்டியில் கால்வாய் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 07, 2024 06:08 AM
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே கள்வேலிப்பட்டி ஊராட்சியில் பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு தண்ணீர் விரைவாகவும், முழுமையாகவும் செல்ல முடியாத நிலை உள்ளது.
கள்வேலிப்பட்டி வழியாக கம்மாபட்டி, விட்டன்குளம் வரை 2 கி.மீ., வரை இக்கால்வாய் செல்கிறது. இதில் ஒன்றரை கி.மீ., ஆக்கிரமிப்பில் உள்ளதால் பாசனநீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இங்குள்ள வீடுகள் முன்பு கால்வாய் மீது சிலாப்பு கற்கள் வைத்தும், சிமென்ட் குழாய்கள் வைத்தும் மண் போட்டு மூடி உள்ளனர். அவை காலப்போக்கில் துார்ந்ததால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகள், தோப்பு, வயல்களில் தேங்குகிறது.
ஊராட்சி தலைவர் அமிர்த ராஜா கூறுகையில், ''பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பே நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய்கள் நிரம்பவில்லை என்றால் விவசாயம் பாதிக்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.