ADDED : ஜூன் 12, 2024 06:17 AM

மேலுார் : மேலுாரில் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றிடம் இருந்து பொதுமக்களை காக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலுார் தாலுகா தலைநகர் என்பதால் சுற்றுவட்டார கிராம மக்களின் போக்குவரத்து அதிகளவில் உள்ளது. பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் ரோட்டில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெறிநாய் கடித்ததில் 7க்கும் மேற்பட்டோர் காயமுற்ற சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஒரு நாய்க்கு கு.க., செய்வதற்கு ரூ.700 வீதம் நகர்மன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி... அதனை இதுவரை செயல்படுத்தவில்லை.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : தாலுகா பகுதியில் மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்டு, மருத்துவமனை பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட ரோட்டோர ஓட்டல்கள், கடைகள் செயல்படுகின்றன. இங்கு இறைச்சிக் கழிவுகளை உண்ணும் நாய்கள், இப்பகுதியில் செல்வோரை வெறி பிடித்து விரட்டி கடிக்கிறது. அதனால் அச்சத்துடனே ரோட்டில் நடக்கிறோம். ரோட்டில் குறுக்கு நெடுக்காக ஓடும் நாய்கள் டூவீலரில் செல்வோர் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் வெறி நாய்களை அப்புறப்படுத்தவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி எஸ்.ஐ., சுப்பையா கூறுகையில், விரைவில் நாய்களுக்கு கு.க., செய்யப்படும் என்றார்.