/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் கருவிகள் நிறுவ வழக்கு
/
மதுரை அரசு மருத்துவமனையில் கருவிகள் நிறுவ வழக்கு
ADDED : ஆக 01, 2024 05:04 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை 6 மாடி நவீன ஆப்பரேஷன் தியேட்டர்களில் பெரும்பாலான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. கட்டுமான பணி நிறைவடைந்ததும் பிற கருவிகள் நிறுவப்படும் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை கே.கே.நகர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: ஜப்பானின் ஜிக்கா (ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை) ரூ.315 கோடி கடனுதவியில் மதுரை அரசு மருத்துவமனையில் நவீன ஆப்பரேஷன் தியேட்டர்கள் கொண்ட 6 மாடி கட்டட பணி 2021ல் துவங்கியது. பணி முழுமை பெறாத நிலையில் பிப்.,26ல் தமிழக முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்.
பொது, இதய ஆப்பரேஷன், காது, மூக்கு தொண்டை உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் இதய ஆப்பரேஷன் துறை, உள், வெளி நோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டன. மற்ற பிரிவுகள் பயன்பாட்டிற்கு வரவில்லை. உயிர் காக்கும் கருவிகளை முழுமையாக நிறுவவில்லை. இதனால் கட்டடம் அமைத்த நோக்கம் நிறைவேறாது. மருத்துவ உபகரணங்களை நிறுவி 22 நவீன ஆப்பரேஷன் தியேட்டர்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: பெரும்பாலான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. கட்டுமான பணி நிறைவடைந்ததும் பிற கருவிகள் நிறுவப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.