ADDED : ஜூன் 21, 2026 03:10 PM

மேலுார்: மதுரை மேலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்த நெல்லை திருவாதவூரில் 10 ஆண்டுகளாக செயல்படும் சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைத்துள்ளனர். இடப் பற்றாக்குறையால் அதே ஊரில் கடந்த ஒன்றரை மாதங்களாக மற்றொரு சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கின்றனர்.
இந்தச் சேமிப்பு கிடங்கில் முள்வேலி போடாமல், நெல்லை திறந்த வெளியில் அடுக்கி பிளாஸ்டிக் சாக்குகளைப் போட்டு மூடி வைத்துள்ளனர். திருவாதவூர், முக்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மாடுகள் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வருகின்றன. இவை சேமிப்பு கிடங்கிற்குள் நுழைந்து இற்றுப் போன சாக்கை கடித்து இழுத்து, நெல்லை உண்பதால் அவை தரையில் கொட்டி வீணாகிறது.
இச் செயல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க முன்வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
