ADDED : ஜூலை 15, 2026 07:11 PM
மதுரை: மதுரையில் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர்களுக்கு டேப்ஸ் ஓய்வூதிய திட்டம் ஒழிக்கப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்ததும், டேப்ஸ் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்தும், 1.1.26 க்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அமுதா துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலர் சங்க நிர்வாகி வீரவேல்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை ஊர்தி ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவர் வேல்முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரி, முன்னாள் தலைவர் சோலையன் பேசினர். சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.
