ADDED : ஜூலை 17, 2024 12:41 AM

மதுரை : தாம்பரம் ஸ்டேஷன் ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 முதல் ஆக. 18 வரை நடக்க உள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் - நாகர்கோவில்அந்தியோதயா விரைவு ரயில் (20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை, நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 21 அன்று மாலை 3:00 மணிக்கு பிகானிரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (22632) சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூரில் நிறுத்தம் உண்டு.
ஜூலை 24, 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் (22535), ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கன்டோன்மென்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் (22613) ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும்.இந்த ரயில்களுக்கும் பெரம்பூரில் நிறுத்தம் உண்டு.
ஜூலை 23 முதல் 31 வரை காரைக்குடி -- சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் -- மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை சென்னை எழும்பூர் -- செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684), ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 9:00 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (20683) தாம்பரம் -- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 4:30 மணிக்கு புறப்படும் தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும். இந்த ரயில்கள் பணிகள் நடக்காத இரவில் பயணிப்பதால் மாற்றமின்றி செல்கின்றன.
