ADDED : ஜூன் 23, 2024 04:13 AM
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று மேலும் 5 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 18 மற்றும் 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 214 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் பலரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரிசையாக உயிரிழப்பு ஏற்பட்டது.
அதில் நேற்று முன்தினம் வரை 4 பெண்கள் உட்பட 50 பேர் பலியான நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் பரமசிவம், 38; கல்யாணசுந்தரம், 43; சேஷசமுத்திரம் சுப்ரமணி, 40; மாதவச்சேரி கண்ணன், 55; சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏமப்பேர் சங்கர், 38; ஆகிய 5 பேர் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 31 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 17 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், இறந்துள்ளனர்.
தற்போது கள்ளக்குறிச்சியில் 107 பேர், சேலத்தில் 31 பேர் புதுச்சேரியில் 17 பேர், விழுப்புரத்தில் 4 பேர் என மொத்தம் 159 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.