/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.61 கோடி பங்குச்சந்தை மோசடி நபரை கைது செய்ய கோர்ட் உத்தரவு
/
ரூ.1.61 கோடி பங்குச்சந்தை மோசடி நபரை கைது செய்ய கோர்ட் உத்தரவு
ரூ.1.61 கோடி பங்குச்சந்தை மோசடி நபரை கைது செய்ய கோர்ட் உத்தரவு
ரூ.1.61 கோடி பங்குச்சந்தை மோசடி நபரை கைது செய்ய கோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 03:42 AM
மதுரை : பங்குச் சந்தையில் டிபாசிட் செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.1 கோடியே 61 லட்சம் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பங்குச் சந்தையில் டிபாசிட் செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக்கூறி, சிலரிடம் மாலியமான் என்பவர் உட்பட சிலர் பணம் வசூலித்தனர். தொகையை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக மாலியமான் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை (எப்.ஐ.ஆர்.,) ரத்து செய்யக்கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறுவது பற்றி எப்.ஐ.ஆரில் எதுவும் இல்லை. போலீசார் விசாரிக்காமல் மனுதாரரும் வழக்கில் ஒரு எதிரிதான் என்ற முடிவுக்கு வந்தனர். வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
அரசு தரப்பு: இது நிதி மோசடி வழக்கு. ரூ.1 கோடியே 61 லட்சம் மோசடி செய்ததாக மனுதாரருக்கு எதிராக 9 புகார்கள் வந்துள்ளன. மேலும் பல புகார்கள் குவிந்து வருகின்றன. முன்ஜாமின் கோரிய மனுதாரரின் மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தலைமறைவாக உள்ளார். மனுதாரரை கைது செய்த பின்பே, விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: விசாரணை நிலுவையில் உள்ளது. மனுதாரர் தரப்பு எழுப்பிய வாதங்களை விசாரணையின்போதுதான் விசாரணை அதிகாரி பரிசீலிக்க முடியும். அவர் நியாயமான முறையில் விசாரணையை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை மட்டுமே வெற்றிபெறும் என்பது அரசின் இலச்சினையில் (சின்னத்தில்) இடம் பெற்றுள்ளது. அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப தங்கள் கடமையை நிறைவேற்றுவதும், உண்மை மட்டுமே வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் விசாரணை அதிகாரி உட்பட ஒவ்வொரு அரசு ஊழியரின் கடமையாகும்.
தனிப்படையை உருவாக்கி, மனுதாரரை விரைவில் கைது செய்ய வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி 6 மாதங்களில் விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

