/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
/
அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ADDED : பிப் 22, 2025 10:26 PM
மதுரை : தஞ்சாவூரில் அங்கீகாரமற்ற அடுக்குமாடி கட்டடத்தை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு ஆதன்கோட்டை லெனின் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 1 தெற்கு தெருவில் அங்கீகாரமற்ற ஒரு தனியார் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. அதை ஆய்வு செய்து அகற்ற மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் திட்டக் குழுமம் (எல்.பி.ஏ.,) உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு: பொதுநல நோக்கில் மனுதாரர் மனுவை தாக்கல் செய்துள்ளார். எல்.பி.ஏ.,விற்கு புகார் அளித்துள்ளார். கட்டுமான பணியை நிறுத்தவும், மேல்நடவடிக்கை தொடரப்படும் எனவும் எல்.பி.ஏ., நோட்டீஸ் அனுப்பியது. உறுதியான நடவடிக்கை இல்லாததால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என மாநகராட்சி தரப்பு தெரிவித்தது.
முழு கட்டடமும் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் ஆஜராகவில்லை. அங்கீகாரமற்ற கட்டடத்தை முழுமையாக அகற்ற எல்.பி.ஏ.,விற்கு உத்தரவிடுவதை தவிர வேறு வழியில்லை. சட்டம்- ஒழுங்கு, போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட போலீசார் உறுதி செய்ய வேண்டும். இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் செல்வாக்கு செலுத்த யாரும் தொலைபேசி அழைப்பு மூலம் அல்லது வேறு வகையில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.
இவ்விவகாரம் 2018 முதல் கிடப்பில் உள்ளதால் விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகளை கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்ள வேண்டும். கட்டடத்திற்கான மின் இணைப்பை உடனடியாக மின்வாரியம் துண்டிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

