/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முத்துப்பட்டி கண்மாய் சீரழிப்பு... நிதி இல்லை என கைவிரிப்பு... மல்லிகை குடியிருப்பு மக்கள் கவலை
/
முத்துப்பட்டி கண்மாய் சீரழிப்பு... நிதி இல்லை என கைவிரிப்பு... மல்லிகை குடியிருப்பு மக்கள் கவலை
முத்துப்பட்டி கண்மாய் சீரழிப்பு... நிதி இல்லை என கைவிரிப்பு... மல்லிகை குடியிருப்பு மக்கள் கவலை
முத்துப்பட்டி கண்மாய் சீரழிப்பு... நிதி இல்லை என கைவிரிப்பு... மல்லிகை குடியிருப்பு மக்கள் கவலை
ADDED : ஜூலை 08, 2024 06:18 AM

மதுரை : மதுரை மாநகராட்சி 73வது வார்டு முத்துப்பட்டி அருகேயுள்ள மல்லிகை குடியிருப்பு பகுதி மக்கள் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி பிரச்னைகள் குறித்து மல்லிகை குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் செல்வராஜன், செயலாளர் ரஞ்சித் குமார், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் அருள் பாக்கியராஜ், இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர்கள் தனசேகர், சம்பத் குமார், பாலசுப்பிரமணியன், குட்டிசங்கர் கூறியதாவது:
குண்டுகுழியுமான ரோடுகள்
இப்பகுதியில் 10 ஆண்டுகளாகவே ரோடு வசதி இல்லை. மண்டலம் 5 குறைதீர்ப்பு முகாம், கலெக்டர் குறைதீர்ப்பு முகாம்களில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி ரோடு சேறும் சகதியுமாக மாறிவிடும். அதில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்னும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. இப்பகுதி களிமண் பூமி என்பதால் குழாய்கள் பதிக்கப்பட்ட போது களிமண் மேல் எழும்பியுள்ளது. மழை பெய்தால் தண்ணீர் அதில் தேங்கி ரோடுகள் வழுக்குகின்றன. இதனால் பலமுறை வழுக்கி விழுந்துள்ளோம். குண்டும் குழியுமாக ரோடுகள் உள்ளதால் அவசரத் தேவைக்கு ஆட்டோ, கால் டாக்ஸி வரமுடியாத நிலை உள்ளது. பஸ் ஸ்டாப் இங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ளதால் வயதானவர்கள், பள்ளிக் குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
பாதாள சாக்கடை
பாதாள சாக்கடை பணிகள் 50 சதவீதமே முடிந்துள்ளது. குறுக்குத் தெருக்களில் மட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதன்மை தெருக்களில் பணிகள் தொடங்காமல் உள்ளதால் பணி முடிந்த பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு வர முடியாத நிலை உள்ளது. பல வீடுகள் காலி மனைகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் கொசுத் தொல்லை பெருகி நோய் தொற்று ஏற்படுகிறது. ரோடு வசதி குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால்,பாதாள சாக்கடை பணியின் போது மீண்டும் ரோடுகள் தோண்டப்படும் நிலை வரும் எனக் கூறி தட்டிக்கழிக்கின்றனர். பாதாள சாக்கடை பணிகளையும் முடிக்க மறுக்கின்றனர்.
தெருவிளக்கு வேண்டும்
இப்பகுதிக்கு 59 தெருவிளக்குகள் வேண்டி மனு கொடுத்ததில் அனுமதி கிடைத்தும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் பல தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன. அதனை பயன்படுத்தி பல முறை நகை பறிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இரவில் வெளியில் வரவே அஞ்சுகின்றனர். கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்தனை நாட்கள் தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகள் இப்போது நிதி இல்லை என மழுப்புகின்றனர்.
சீரழியும் கண்மாய்
மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி இல்லாததால் காலி மனைகளில் குப்பை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அருகில் உள்ள முத்துப்பட்டி கண்மாய் தான் இப்பகுதிக்கு நிலத்தடி நீராதாரமே. அதில் குப்பை, கழிவுநீர் கலப்பதால் பாசி படர்ந்து மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீரின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. காசுக்கு குடிநீர் லாரியை அணுகினால் ரோடு வசதி இல்லாததை காரணம் காட்டி இப்பகுதிக்குள் வர மறுத்து மெயின் ரோட்டிலேயே நின்று விடுகின்றனர். இதனால் வயதானவர்கள் நடந்து சென்று குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இங்கு கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் பாம்புகளின் புகலிடமாக அவை உள்ளன. நகர் பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களை இரவோடு இரவாக இங்கு விட்டுச் செல்கின்றனர். பன்றித் தொல்லையும் அதிகளவில் உள்ளது. அருகில் சுகாதார நிலையம் இருந்தும் டாக்டரோ, நர்சுகளோ இருப்பதில்லை என்றனர்.